Monday 5 October 2015

காளான் பதனிடும் தொழில்நுட்பம்

காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது.
காளான் தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவர நோயியல் துறை பேராசிரியை முனைவர் உஷாராணி தெரிவித்தது:
காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும்.
இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும், அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும், அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.
தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் வாயிலாக கோ.1, எம்.2, ஏ.பி.கே.1, எம்.டி.யு. மற்றும் ஊட்டி 1 போன்ற சிப்பிக் காளான் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பால் காளான் (ஏ.பி.கே.2) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பூஞ்சான உணவுக் காளான்களில் உள்ள ஈரப்பதம் காரணமாக காய்கறி மற்றும் பழங்களை போன்று எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது.
ஆதலால் அதை பதப்படுத்தி பாதுகாத்தல் அவசியமாகும்.
காளான்களை அறுவடைக்குப் பின் அவற்றின் தேவைக்கு ஏற்பட சேமித்து வைக்கும் முறைகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று குறுகிய கால சேமிப்பு, மற்றொன்று நீண்ட கால சேமிப்பு.
உலர் முறையில் பதப்படுத்துதல்:
காளான் உலர் முறையில் மிதவைப்படுகை முறை உலர்த்துதலில் உலர்த்தப்படும் பொருள் மிதவை நிலையில் இருப்பதால் ஈரப்பதம் எளிதில் நீக்கப்படுவதுடன் தரமும் பாதுகாக்கப்படுகிறது.
இம்முறையில் காளானை உலர வைக்க ஒரு மிதவைப் படுகை உலர்த்தியை வேளாண் பல்கலைக்கழகம் வேளான் பதன்செய் துறையில் வடிவமைத்துள்ளது.  மிதவைப்படுகை உலர்த்தியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிமிடத்துக்கு 35 மீ காற்று ஓட்டவீதத்தில் காளான்களை எளிதில் உலர்த்தலாம்.
இவ்வாறு உலர்த்தப்பட்ட காளானின் தரம் மேம்பட்டதாகவும் உள்ளது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 12 சதவீத ஈரப்பதம் உள்ள நிலையில் காளான்களை காற்றுப் புகா வண்ணம் பெட்டிகளில் அடைத்து வைத்தால் குறைந்தது ஓராண்டுக்கு அவைகள் கெடாமல் இருக்கும்.இந்த உலர்த்தியின் விலை ரூ.20 ஆயிரம்.
உறைய வைத்து பதப்படுத்துதல்:
பிளான்சிங் செய்யப்பட்ட காளான்களை பாலித்தின் பைகளில் நிரப்பி அவற்றை 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய வைத்து பாதுகாக்கலாம்.
இம்முறையில் தரம் நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கப்பட்டாலும் இதற்கான செய்யப்படும் செலவு காரணமாக இம்முறையை பொதுவாக பின்பற்றப்படுவதில்லை.
உறைந்த பின் காயவைத்துப் பதப்படுத்துதல்:
இம்முறையில் காளான்களை 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைப்பதால் அதில் உள்ள நீரானது பனிக்கட்டிகளாக மாறி விடுகின்றது.
பின்பு அவற்றை வெற்றிடத்துக்கு உட்படுத்துவதால் பனிக்கட்டிகள் பதங்கமாதல் முறையில் நீக்கப்படுகின்றது.
இவ்வாறு நீக்கப்பட்ட காளான் ஈரப்பதம் 3 சதவீதமாக இருக்கும். இம்முறையில் உலர்த்த சுமார் 12-16 மணி நேரம் ஆகின்றது.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காளானின் தரம் உயர்ந்ததாக இருக்கும்.
கதிரியக்கத்துக்குட்படுத்தி பாதுகாத்தல்:
காளானை கோபால்ட் – 50 என்றும் கதிரியக்கப் பொருளின் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி 15 டிகிரி செல்சியல் வெப்பநிலை மற்றும் 90 சதவீதம் ஈரப்பதத்தில் வைத்திருப்பதன் மூலம் சுமார் 12 முதல் 16 நாள்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.
சவ்வூடு பரவல் முறையில் பதப்படுத்துதல்:
பொதுவாக உப்புக் கரைசலோ, சர்க்கரை கரைசலோ அல்லது இரண்டும் சேர்ந்த கரைசலோ சவ்வூடு கரைசலாக பயன்படுத்தப்படுகிறது.
இச்சவ்வூடு கரைசலில் காளான்களை 30 நிமிடங்கள் வைத்திருப்பதால் அவற்றில் உள்ள ஈரப்பதம் 50 சதவீத அளவுக்கு வெளியேற்றப்படுகின்றது.
இவ்வாறு ஈரப்பதம் குறைக்கப்பட்ட காளான்கள் வெப்பக் காற்றின் உதவியால் உலர்த்தப்பட வேண்டும்.
நிலையான வளி அழுத்த சூழலில் பாதுகாத்தல்:
இந்த முறையில் காளான் வைக்கப்பட்டிருக்கும் சூழலில் கரியமில வாயு மற்றும் பிராணவாயு அளவினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் சுவாசிக்கும் தன்மை பாதிக்கப்படுகின்றது, இவ்வாறு செய்வதன் மூலம் காளான்களை சேமித்து வைக்கும் காலம் அதிகரிப்படுவதுடன் காளான் பழுப்பு நிறமாவது தடுக்கப்படுகின்றது.
காளான் ஊறுகாய்:
காளானை ஊறுகாய் செய்து பாதுகாப்பது மூலம் நீண்ட நாள்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும்.
இதற்குக் காளான்களை சுத்தமான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது.
தேவைப்பட்டால் சுத்தமான மெல்லிய துணியால் மென்மையாக துடைத்து எடுக்கலாம்.
முந்திரி, ஜாதிப்பத்திரி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை வானலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.  பின்பு நல்லெண்ணெயைக் காய வைத்து அதில் காளான் துண்டுகளை இட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வறுத்து பொடி செய்ததை காளானில் ருசிக்கேற்ப உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கலக்கி இறக்கி, சூடு ஆறிய பின் சுத்தமான ஈரமற்ற பாட்டில்களில் நிரப்பி பாதுகாக்கவும்.
தற்போது பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் காளான் உற்பத்தி 7 மடங்காக பெருகியுள்ளது.  இந்நிலையில் காளான்களை பதப்படுத்தி பெரும்பாலும் டப்பாக்களில் அடைத்தும், ஊறுகாய் செய்து பதப்படுத்தி விற்பனை செய்தும் அதிக லாபத்தை ஈட்டலாம்.
மேற்கூறிய பதன் செய் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தரம் வாய்ந்த காளான்களை உற்பத்தி செய்து அவற்றினை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கும், நமக்கும் பயனளிக்கும் என்பதில் சிறதளவும் கூட ஐயமில்லை என்றார் அவர்.


Thursday 4 June 2015

தீவன உற்பத்தி

தீவன உற்பத்தி

பயறு வகை தீவனப் பயிர்கள்
தட்டைப் பயறு / காரமணி

  • இந்த பயிர் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மற்றும் குளிர் பிரதேசங்களில் வளரக் கூடியது.
  • தட்டைப்பயிரை பசுந்தீவனமாகவும், மேய்ச்சல் தரையாகவும்,  உலர் தீவனமாகவும் மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்பில் மக்காசோளம் மற்றும் சோளப்பயிருடன் கலந்து உபயோகிக்க வளர்த்தப்படுகிறது.
  • மூன்று பருவ காலங்களில் பயிரிடலாம்.
  • வருடந்திர பயிராக பயிரிடலாம்.
  • ரகங்கள் – CO5, ரஷ்யன் ஜெய்ண்ட், EC 4216, UPC – 287 மற்றும் உள்ளுர் வகைகள்.
  • விதையளவு – 40 கிலோ / ஹெக்டர்.
  • அறுவடை விதைத்த 50 -55 நாட்களில் (50% பூக்கும் தருணத்தில்)
  • CO5 ரகமானது  பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிட ஏற்றது.    (ஜூன் – ஜூலை மாதங்களில்)
CO5 ரகத்தின் குணங்கள
  • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் --18 to 20
  • உலர் பொருள் அளவு (%) – 14.64
  • கச்சாப் புரதம் (%) – 20.00
  • பயிரின் உயரம் ( செ.மீ.) – 93.00
  • கிளைகள் – 2-3
  • இலைகள் – 12
  • இலையின் நீளம் (செ.மீ.) – 12.1
  • இலையின் அகலம் (செ.மீ.) – 8.2
  • இலை தண்டு விகிதம் – 8.3
  • பயிரின் அமைப்பு – பாதி விரிந்த அமைப்பு.
  • பயிரின் வகை – நடுத்தர வகை

வேலிமசால

  • இப்பயிர் நீர்பாசன வசதியுள்ள இடங்களில் வருடம் முழுவதும், மானாவரியில் ஜீன் – அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்.
  • விதையின் அளவு 20 கிலோ / ஹெக்டர் .பார் அமைத்து கரையின் ஒரங்களில் உரங்கள் இட்டபிறகு, 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை இட்டு மண்ணால் மூடிவிடவேண்டும்.
  • விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பிறகு 3 வது நாளும் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • முதல் அறுவடை, விதைப்பு செய்த 90 நாட்கள் கழித்து அல்லது பயிர் 50 செ.மீ உயரம் வளர்ந்தவுடன் செய்யலாம். பிறகு 40 நாட்களில் இடைவேளியில் அதே உயரத்தில் அறுவடை செய்யலாம்.

குதிரை மசால்

  • குதிரை மசால் தீவனப்பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.
  • இது நன்கு ஆழமாக வேரூன்றி வருடம் முழுவதும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரக்கூடிய பயிராகும்.
  • நல்ல சுவையுள்ள பயிராகும். கச்சா புரதம் 15-20 சதவீதம் உள்ளது.
  • இப்பயிர்களின் வேர்முடிச்சுகளால் நுண்ணுயிரிகள் பெருகி காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலை படுத்துவதால் மண் வளம் அதிகரிக்கிறது.
  • இதை பசுந்தீவனமாகவும்,உலர்தீவனமாகவும், ஊறுகாய் புல் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் மேய்ச்சல் தரையாக பயன்படுத்த இயலாது.
  • ரகங்கள் – ஆனந்த் 2, சிர்ஸா -9, IGFRI S – 244, and கோ -1.
  • கோ 1 ரகம் ஜூலை – டிசம்பர் காலத்திற்கு எற்றது.
  • குதிரை மசால் மிக வெப்பமான மற்றும் மிகவும் குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றது அல்ல.
  • விதை அளவு. – 20 கிலோ / ஹெக்டர்.
  • முதல் அறுவடை விதைப்பு செய்து 75-80 நாட்கள் கழித்தும், பிறகு 25 – 30 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.

கோ 1 ரகத்தின் குணங்கள் (Characters of Variety Co 1)
  • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் / வருடம் – 70-80 ( 10 அறுவடையில் )
  • விதை உற்பத்தி கிலோ / ஹெக்டர் - 200- 250
  • புரதத்தின் அளவு (%) – 20-24
  • உலர் பொருள் அளவு (%) – 18-20
  • தாவரத்தின் உயரம் (செ.மீ) -60-80
  • ஒரு கதிரில் உள்ள கொத்துகளின் எண்ணிக்கை – 12-15
முயல் மசால்

  • முயல் மசால் நேராக வளரக்கூடியது. இதன் தாயகம் பிரேசில் ஆகும்.
  • இது 0.6 முதல் 1.8 மீ வரை வளரக் கூடியது.
  • வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வறட்சியினைத் தாங்கி, குறைந்த அளவு வளம் கொண்ட மண், அமிலத்தன்மை கொண்ட மண் மற்றும் குறைந்த வடிகால் உள்ள பகுதியில், முயல் மசால் வளரும் தன்மை படைத்தது
  • வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய முயல் மசால், குறைந்த அளவு மழை பெறும் (450-840 மிமீ) பகுதிகளிலும் வளரும்
  • பல்வேறு விதமான மண் வகைகளிலும் முயல் மசால் வளரக்கூடியது
  • முயல் மசாலில் உள்ள புரதத்தின் அளவு 15-18 சதவிகிதமாகும்
  • முயல் மசால் நன்கு வளரக்கூடிய பருவம் – ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை
  • 30 x 15 செ.மீ வரிசையாக விதைப்பதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 6 கிலோ என்ற அளவிலும், தெளித்தல் முறையின் மூலம் விதைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவிலும் விதைகள் தேவைப்படும்
  • விதைப்பு செய்து 75 நாட்கள் கழித்து, முயல் மசால் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். அடுத்த அறுவடைகள் இத்தீவனப் பயிரின் வளர்ச்சியனைப் பொருத்தது
  • முதல் வருடத்தில், பயிரின் வளர்ச்சி குறைவாகவும், அதன் உற்பத்தியும் குறைவாகவும் இருக்கும்
  • முயல் மசால் விதைப்பு செய்து ஒரு வருடம் ஆன பின்பு அதன் விதைகளே கீழே விழுந்து முளைத்து விடுவதால், ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் 35 டன்கள் வரை முயல் மசால் அறுவடை செய்யலாம்

தானிய
வகை தீவனப் பயிர்கள்
தீவன மக்காச்சோளம்

  • தீவன மக்காச்சோளம் பல்வேறு விதமான மண் ரகங்களில் வளரும் தன்மையுடையது. ஆனால் நல்ல வடிகால் கொண்ட சத்துகள் நிறைந்த வளமான மண்ணில் தீவன மக்காச்சோளம் நன்றாக வளரும்
  • மக்காச்சோளம் கரிஃப் பருவத்தில் வளரும் பயிரமாகும். அதாவது ஜூன் மற்றும் ஜூலையில் விதைப்பு செய்யப்படும். தென்னிந்தியாவில், ராபி மற்றும் வெயில் காலங்களில் இது பயிர் செய்யப்படுகிறது
  • தண்ணீர் பாசன வசதி கொண்ட நிலங்களில் மக்காச்சோளத்தினை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்
  • ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்
  • ஒவ்வொரு விதையையும் 30 செமீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் 15 செமீ இடைவெளியில் ஊன்றுவதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 40 கிலோ விதை தேவைப்பபடும்
  • ஒரு ஹெக்டேரில் விதைப்பு செய்த மக்காச்சோளத்தலிருந்து கிடைக்கும் தீவனத்தின் அளவு 40-50 டன்களாகும். ஆனால் இதன் டிரை மேட்டர் எனப்படும் தண்ணீரற்ற சத்தின் அளவு ஒரு ஹெக்டேருக்கு 10-15 டன்களாகும்
  • நீண்ட நாட்களுக்கு பசுந்தீவனத்தினைப் பெற நேரடியாக விதைப்பு செய்யலாம்
  • மக்காச்சோளக் கருது பால் கருதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும்
தீவன சோளம்/சோளம்/ஜோவர்

  • சோளம் தானிய உற்பத்திக்கும், தீவன உற்பத்திக்கும் பயிரிடப்படுகிறது
  • சோளம் வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்
  • வெப்ப மண்டலப் பகுதிகளில் 25-35o செல்சியஸ்  வெப்பநிலையில் சோளம் நன்றாக வளரும்
  • மலைப்பகுதிகளில் அதாவது 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள இடங்கள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றதல்ல
  • வருட மழையளவு 300-350மிமீ இருக்கும் இடங்களில் சோளம் பயிரிடப்படுகிறது
  • மணல் பாங்கான மண்ணைத் தவிர மற்ற எல்லா வித மண்ணிலும் சோளம் வளரும்
  • நீர்ப்பாசனம் அளிக்கப்படும் இடங்களில் பயிரிட ஏற்ற சோள இரகங்கள் (ஜனவரி முதல் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் முதல் மே) கோ-11, கோ-27, கோ-எஃப் எஸ் 29
  • மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் சோள ரகங்கள் (செப்டம்பர்-அக்டோபர்) கே 7, கோ-27, கோ எஃப் எஸ் 29, கே 10
  • கோ எஃப் எஸ் – 29 எனும் சோள ரகத்தினை ஒரு முறை பயிரிட்ட பிறகு திரும்பத் திரும்ப அறுத்து மாடுகளுக்குப் தீவனமாக போடலாம். இந்த ரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. டி என் எஃப் எஸ்  9602 மற்றும் சூடான் புல் ரகங்களின் கலப்பினம் மூலமே கோ எஃப் எஸ் 29 சோள ரகம் உருவாக்கப்பட்டது
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் சோளம் பயிரிடத் தேவையான விதையளவு 40 கிலோக்களாகும். (கோ எஃப் எஸ் 29 ரகத்திற்கு மட்டும் 12.5 கிலோ)
  • பசுந் தீவனமாக சோளத்தினை பூ விட்ட பிறகு உபயோகிக்கலாம்
  • ஒரு முறை மற்றும் அறுவடை செய்யப்படும் சோளப் பயிரை அதன் 60-65ம் நாள் அறுவடை செய்யலாம். ஆனால் பல முறை அறுத்து உபயோகிக்கப்படும் சோளப்பயிரை விதை விதைத்து 60 நாளும், பிறகு 40 நாள் கழித்தும் அறுவடை செய்யலாம்
  • ஆனால் கோ. எஃப். எஸ் 29 ரக சோள ரகத்திற்கு மட்டும் 65 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்
    (வருடத்திற்கு 5 அறுவடைகள்)
புல் வகை தீவனப் பயிர்கள்
கலப்பின  நேப்பியர்கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அல்லது பாஜ்ரா நேப்பியர் கலப்பினம்

  • கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் பசும் தீவனத்தில், நேப்பியர் புல்லை விட அதிக கிளைகளும்,இலைகளும் இருப்பதுடன், வேகமாக வளரும் திறன் படைத்தது. இதனால் தரமான மற்றும் அதிக அளவிலான தீவனத்தினைப் பெற முடியும்
  • இந்த பசும் தீவனத்திலுள்ள புரத அளவு 8-11%
  • கோ சி என் 4 எனப்படுவது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  கலப்பின நேப்பயர் புல் ரகமாகும். இப் புல்வகைத் தீவனம் கோ 8 கம்பு  ரகத்தையும் நேப்பியர் எஃப் டி 461 ரகத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின புல்வகைத் தீவனமாக்கும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 380-400 டன்கள் கலப்பின நேப்பியர் பசும் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இத்தீவனப் பயிரில் அதிகப்படியான மென்மையான, ஈரப்பதம் அதிகம் கொண்ட கிளைகள் இருப்பதுடன், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலின்றி இருக்கும். வருடம் முழுவதும் இப்பசுந்தீவனத்தை நீர்ப்பாசன வசதி இருக்கும் இடங்களில் அறுவடை செய்யலாம்
  • கேகேஎம்- 1 கம்பு நேப்பியர்- வருடத்திற்கு 288 டன்கள் வரை அறுவடை செய்யப்படும் ஒரு கலப்பின புல் வகை பசுந்தீவனமாகும். இத்தீவன ரகம் தரம் உயர்ந்ததாகவும், அதிக கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிகுந்ததாகவும், குறைவான ஆக்சலேட் சத்து உள்ளதாகவும் இருக்கும்
  • பூசா ஜெயண்ட், என்பி 21, என்பி 37, ஐ ஜி எஃப் ஆர் ஐ 5, ஐ ஜி எஃப் ஆர் ஐ 7 மற்றும் ஐ ஜி எஃப் ஆர் ஐ 10 ரகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் ரக கலப்பின நேப்பியர் ரகங்களாகும்
  • Co1, Co2, Co3, Co4 & KKM1  போன்றவையும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட கலப்பின நேப்பியர் ரகங்களாகும். இந்த ரகங்கள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும், வருடம் முழுவதற்கும் வளர்வதற்கு ஏற்றவை
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிட 40000 கரணைகள் தேவைப்படும்
  • முதல் அறுவடை நடவு செய்து 75 – 80 நாட்கள் கழித்தும், பிறகு அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்
கினியா புல்

  • இந்த புல் வகைத் தீவனம் உயரமான, முழங்குகள் அதிகமுள்ள வேகமாக வளரும், கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய பல வருட பசுந்தீவனப் பயிராகும்
  • இதன் ரைசோம் சிறியதாக இருக்கும்
  • விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ கினியா புல் பயிரிடப்படுகிறது
  • இதிலுள்ள புரதத்தின் அளவு 4-14%
  • ஹேமில், பிபிஜி 14, மாகுனி, ரிவர்ஸ் டேல் போன்றவை கினியா புல்லின் சில ரகங்களாகும்
  • Co1 மற்றும் Co2  ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கினியாப்புல் ரகங்களாகும்
  • களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது
  • வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்
  • விதையளவு – ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 66000 கரணைகள்
  • இடைவெளி – 50 X 30 செமீ
  • முதல் அறுவடை விதை முளைத்து 75-80 நாட்கள் கழித்தோ அல்லது கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்
  • ஹெட்ஜ் லூசர்ன் எனப்படும் வேலி மசாலுடன் கினியா புல்லை 3;1 என்ற விகிதத்தில் பயிர் செய்து வேலி மசாலுடன் சேர்த்து தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம்
பாராபுல்நீர்ப்புல் அல்லது தண்ணீர்ப் புல் அல்லது எருமைப்புல்

  • ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த புல்வகைத் தீவனத்தினைப் பயிரிடலாம்
  • பருவ காலங்களின்போது தண்ணீர் தேங்கும் சமவெளிகளிலும், பள்ளமான இடங்களிலும் இப்புல் ரகத்தினை வளர்க்கலாம். அதாவது நிலத்தில் தண்ணீர் தேங்குவதையும், நீண்ட நாள் வெள்ளப்பெருக்கையும் இப்புல் ரகம் தாங்கி வளரும் தன்மையுடையது
  • வறண்ட அல்லது மிதமான வறண்ட நிலங்களில் இந்த புல் ரகம் வளராது
  • இப்பயிர் குளிரினால் அதிகம் பாதிக்கக்கூடியது. எனவே இந்தியாவில் குளிர் அதிகமிருக்கும் பகுதிகளில் குளிர் காலத்தில்  இப்பயிரில் வளர்ச்சி எதுவும் இருக்காது
  • தண்ணீர் தேங்கும் மண் வகைகள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றவை
  • மணல் பாங்கான மண்ணிலும்,, நீர்ப்பாசனம் போதுமானதாக இருந்தால் இந்த தீவனப்புல் ரகம் நன்கு வளரும்
  • விதைப்பு செய்வதன் மூலம் இந்த தீவனப்பயிரைப் பயிரிடுவது கடினம். எனவே தண்டுகளை வெட்டி ஊன்றுவதன் மூலம் இந்த தீவனப்புல்லை பயிரிடலாம்
  • தென்னிந்தியாவின் எந்த பருவ நிலையிலும் இந்த தீவனப்புல்லைப் பயிரிடலாம். ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப் பொழிவு இருப்பதால் இதனை பயிர் செய்வதற்கு இந்த மாதங்கள் ஏற்றவையாகும்
  • உள்நாட்டு பாரா புல் ரகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.. இந்த தீவனப்புல்லில் கலப்பின ரகங்கள் இல்லை
  • மெல்லிய தண்டுகள் விதைக் கரணைகளாகப் பயன்படுகின்றன. 2-3 கணுக்கள் கொண்ட தண்டுகளை 45-60 செமீ அகலமுள்ள பார்களாக 20 செமீ இடைவெளியில் அமைத்து இக்கரணைகளை ஊன்றலாம். ஈர மண்ணில் கரணையின் இரண்டு முனைகளும் ஒட்டிக்கொண்டிருக்குமாறு வைத்து மண்ணில் ஊன்றவேண்டும்
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் நடுவதற்கு 800-1000 கிலோ கரணைகள் தேவைப்படும்
  • இக்கரணைகளை ஊன்றி 75-80 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். பின்பு 40-45 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு வருடத்தில் 6-9 முறை இப்புல்லை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேரில் ஒரு வருடத்திற்கு 80-100 டன்கள் தீவனப்புல் கிடைக்கும்
  • இந்த தீவனப்புல்லை பசுந்தீவனமாக மாடுகளுக்கு அளிக்கலாம்
  • இந்த தீவனப்புல்லை பதப்படுத்தி வைக்கோலாகவோ அல்லது சைலேஜ் எனப்படும் ஊறுகாய் புல்லாகவோ தயாரிக்க முடியாது
நீல பஃபல் புல் அல்லது நீலக்கொழுக்கட்டைப்புல் அல்லது கோ 1

  • வறண்ட நிலங்களில் நீர்ப்பாசனம் அளிக்கப்படும்போது சென்க்ரஸ் எனும்  இந்தப்புல் ரகம் நன்றாக வளரக்கூடிய ஒரு பசுந்தீவனப் பயிராகும்
  • சென்க்ரஸ்சீலியாரிஸ் அல்லது அன்ஜன் புல் மற்றும் சென்க்ரஸ்செடிகெரஸ்அல்லது கருப்பு அன்ஜன் புல் போன்றவை பொதுவாக வளர்க்கப்படும் இந்த புல் ரகங்களாகும். ஆனால் இவை குறைந்த மகசூலை மட்டுமே கொடுக்கக்கூடியவை
  • சென்க்ரஸ்கிளாகஸ் எனப்படும் மற்றொரு ரகம் வறண்ட நிலங்களில் மற்ற புல் இனங்களை விட நன்றாக வளரும்
  • தண்ணீர் நன்றாக வடியும், அதிக கால்சிய சத்து கொண்ட மண் ரகங்கள் இத்தீவனப்புல் வளர ஏற்றதாகும்
  • ஒரு ஹெக்டேர் நிலத்தல் பயிரிடத் தேவைப்படும் விதையளவு 6-8 கிலோக்களாகும்
  • விதைப்பு செய்து 70-75 நாட்கள் கழித்து முதல் அறுவடையும் பிறகு 4-6 முறையும் இப்பயிரை அறுவடை செய்யலாம்
  • ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் இப்புல்லை பயிரிடுவதால் வருடத்திற்கு 40 டன்கள் வரை 4-6 அறுவடைகளில் பசுந்தீவனம் பெறலாம்
மரவகை தீவனப் பயிர்கள்
சூபா புல் அல்லது சவுண்டல் அல்லது கூபாபுல்


  • பருவ நிலைக்கேற்ற பயிர் செய்யப்படும் சூபா புல் ரகங்கள் உள்ளன
  • ஜூன்- ஜூலை மாதம் – ஹவாயன் ஜெயண்ட்-  (ஐவரி கோஸ்ட்), கோ 1
  • மானவாரி ரகம் (செப்டம்பர்- அக்டோபர்), கே 8, ஜெயண்ட் இல்பில்-இல்பில், கோ 1
  • சூபா புல்லை நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்யலாம். எனினும் முதல் அறுவடை மரத்தின் அடிப்பகுதி 3 செமீ அளவிற்கு தடிமனாகிய பின்பு அல்லது மரம் ஒரு முறை காய் வைத்து விதைகளை உற்பத்தி செய்த பின்னரே முதல் அறுவடை செய்யவேண்டும்
  • முதல் அறுவடைக்குப் பின்பு 40-80 நாட்களுக்கு ஒரு முறை மரத்தின் வளர்ச்சி மற்றும் பருவ நிலையினைப் பொருத்து அறுவடை செய்யலாம்
  • வறட்சியான பகுதிகளில், மரத்தினை இரண்டு வருடம் வரை வளர விட்டு, அதன் வேர்ப்பகுதி நன்றாக ஆழமாக ஊன்றிய பின்னரே அறுவடை செய்யவேண்டும்
  • மண்ணிலிருந்து 90-100 செமீ உயரம் விட்டு மரத்தை வெட்டவேண்டும்
  • நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு ஹெக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினை உற்பத்தி செய்யும்
  • மழை பெய்யும் நேரங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 40 டன்கள் வரை பசுந்தீவன உற்பத்தியினை மரத்தின் 2ம் வருட வயதிலிருந்து பெறலாம். மேலும் சூபா புல் மரத்தினை 100 செமீ உயரம் வரை விட்டு கவாத்து செய்யலாம்
கிளைரிசிடியா

  • கிளைரிசிடியா வெளிறிய உட்பகுதியுடன் கூடிய சிறிய, இலை உதிரக்கூடிய மர ரகமாகும்
  • கிளைரிசிடியா செப்பியம் பல்வேறு பருவ நிலைகளைத் தாங்கி வளரக்கூடியது. வருட மழை அளவு 900 மிமீக்கு அதிகமாக பெய்யும் இடங்களில் இத் தீவன மரம் நன்றாக வளரும். ஆனால் வருட மழையளவு 400 மிமீக்கு குறைவாக உள்ள பகுதிகளிலும் கிளைரிசிடியா வளரும் தன்மை உடையது
  • கரிசல் மண் முதல், பாறைகள் அதிகம் கொண்ட மண்ணிலும் இந்த தீவன மரம் வளரும். மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும், மண்ணின் அதிகப்படியான ஈரப்பதத்தைத் தாங்கி கிளைரிசிடியா வளரும்
  • இந்த மரம் விறகுக்கும், கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், நிழலுக்கும், நீண்ட தடிகளை உற்பத்தி செய்யவும், உயிர் வேலி அமைக்கவும், மற்ற செடிகள் தாங்கி வளர்வதற்கு பந்தல் அமைக்கவும் பயன்படுகிறது
  • கிளைரிசிடியா அழகுக்காகவும், காஃபி பயிருக்கு நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது
  • விதைகள் மூலமாகவும், கரணைகள் மூலமாகவும் இம்மரம் உற்பத்தி செய்யப்படுகிறது
  • கிளைரிசிடியா செப்பியம் மற்றும் கிளைரிசிடியா மேக்குலேட்டா போன்ற இரண்டு கிளைரிசிடியா ரகங்கள் கிடைக்கின்றன
  • கிளைரிசிடியா மேக்குலேட்டா பசுந்தாள் உரமாகப் மிகவும் பயன்படுகிறது. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் வளத்தினை கிளைரிசிடியா அதிகரிக்கிறது
  • ஒவ்வொரு முறை வெட்டிய பின்பும் கிளைரிசிடியா அதிகப்படியான கிளைகளை உருவாக்கி சீக்கிரம் வளரும்
  • ஒரு ஹெக்டேர் நிலத்தினை சுற்றி இம்மரத்தினை நடுவதன் மூலம் 2-2.5 ஹெக்டேர் நிலத்திற்கு தேவைப்படும் பசுந்தாள் உரத்தினைப் பெறலாம்
அகத்தி

  • அகத்தி மரத்தின் இலைகள் கால்நடைகளால் குறிப்பாக வெள்ளாடுகளால் விரும்பி உண்ணக்கூடியவையாகும்
  • இம்மரத்தின் இலைகளில் 25% புரதம் உள்ளது
  • நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் அகத்தி வருடம் முழுவதும் வளரும்
  • தண்ணீர் வடிகால் உள்ள பகுதிகளில் அகத்தி நன்கு வளரும்
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் 7.5 கிலோ விதை விதைக்கத் தேவைப்படும். விதைகளை விதைப்பதற்கான இடைவெளி 100 செமீ x 100 செமீ (அதாவது பார்களுக்கு இடையில் 100 செமீ , மரங்களுக்கு இடையில் 100 செமீ இடைவெளி இருக்கவேண்டும்)
  • விதைப்பு செய்து 8 மாதங்களுக்குப் பிறகு முதல் அறுவடையும் பிறகு ஒவ்வொரு 60-80 நாட்களுக்கு இடைவெளியில் அறுவடை செய்யலாம்
  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஒரு வருடத்தில் 100 டன்கள் வரை பசுந்தீவனம் கிடைக்கும்.

தீவனம் அளித்தலும் தீவன மேலாண்மையும் Feed management


வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது. அவை உயிர்வாழ மட்டுமல்லாது. மனிதனுக்குப் பயனுள்ள இறைச்சிக்கும் பால் உற்பத்திக்காகவும் ஆகும். மற்ற உயிரினங்களைப் போன்றே ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள், கொழுப்பு. உடல் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான புரதம் மற்றும் தாது உப்புகள், வைட்டமின்கள் தேவை. உணவுப் பொருட்கள் செரிக்கவும். உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை. உடலில் 20% நீர் குறைவுபட்டால் உயிர் வாழ முடியாது. நீர் சத்துப் பொருள் எனப்படாவிட்டாலும், அது உணவுடன் இன்றியமையாதது ஆகும். இது குறித்து முதலில் விவாதிக்கலாம்.
தண்ணீர்
ஆடுகளுக்குச் சுத்தமான நீர் எப்போதும் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நலம். முடியாத நிலையில் 2, 3 முறை நீர் வழங்குவது நல்லது. ஆடுகள்தானே எனத் தூய்மையற்ற நீரைக் குடிக்கக் கொடுக்கக் கூடாது. பொதுவாக ஏழைகள் ஊறல் தண்ணீர் என்று புளித்த சமையல் கழிவு நீரைச் சேமித்து வைத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். இது சிறந்த முறையன்று. அரிசி, பருப்பு அலசிய நீரை உடனடியாகக் கொடுத்து விடுவதே சிறந்தது. மேலும், தூய்மையற்ற நீர் நிலைகளின் நீர் மூலம் தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆட்டுப் பண்ணை அமைக்க விரும்புபவர்கள், நமது குடிநீர் போன்ற தரமான நீர் ஆடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதிகப் பால் வழங்கும் வெளிநாட்டு ஆடுகள் தினம் சுமார் 25 லிட்டர் நீர் குடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது சூழ்நிலையில் வெள்ளாடு தனது தேவை அறிந்து தண்ணீர் குடிக்க ஏதுவாக அது குடிக்கும் அளவு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.அடுத்து, சத்துப் பொருள்களான மாவுப் பொருள், கொழுப்பு மற்ற உயிரினங்கள் போல் ஆடுகளுக்குத் தேவைப்படும். அத்துடன் அசைபோடும் விலங்கினங்கள் அவற்றிற்குத் தேவையான எரி சக்திப் பொருனை நார்ப் பொருட்களிலிருந்தும் பெறுகின்றன. நார்ப் பொருட்கள் நுண்ணுயிர்களால் தாக்கப்பட்டு, அசிடிக், புரோப்பியோனிக் மற்றும் புயூட்ரிக் அமிலங்கள் பெறப்படுகின்றன. இவை இரத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, சர்க்கரைப் பொருளாகவும் மாற்றப்படுகின்றது. ஆகவே பெரு வயிறு திறம்பட வேலை செய்ய வெள்ளாடுகளுக்கு நார்ப் பொருள் நிறைந்த தீவனமும் தேவைப்படுகின்றது. இவ்வாறாக நமது உணவுடன் போட்டியிடாமல் இலை, தழை, புல், பூண்டுகளை உண்டு வெள்ளாடுகளால் வாழ முடிகின்றது.
புரதம்
உடல் வளர்ச்சிக்கும் உடல் உறுப்புகளின் தேய்மானம் சுரப்பிகளின் நொதியம் மற்றும் ஆர்மோன்களுக்கும் பால் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது. ஆகவே மற்ற உயிரினங்களைப் போன்று வெள்ளாடுகளுக்குப் புரதம் தேவைப்படுகின்றது. ஆனால் அகைபோடும் விலங்கினங்கள் சுத்தப் புரதம் தவிரப் புரதம் சார்ந்த பொருட்களிலிருந்தும் பெருவயிற்று நுண்ணுயிர் மூலமும் புரதம் பெறமுடிகின்றது. ஆகவே மனிதர்களுக்குத் தகுதியற்ற முரட்டுப் புரதங்களிலிருந்து தரமான புரதம் வெள்ளாடுகளால் பெற முடிகின்றது.
45.4 கிலோ எடைக்கு 41 கிராம் புரதம் உடலைப் பேணத் தேவைப்படுகின்றது. அத்துடன் 4.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 227 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் சராசரி ஆட்டிற்குப் புரதத் தேவையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தாதுஉப்புத் தேவை
வெள்ளாடுகள் பசுக்களைவிட, 50% அதிக உப்பைப் பாலில் சுரக்கின்றன. ஆகவே வெள்ளாடுகளின் உப்புத் தேவை அதிகம். ஆகவே கொடுக்கும் கலப்புத் தீவனத்தில் 1% சாதா உப்பு கொடுக்க வேண்டும். பிற தாது உப்புத் தேவையை நிறைவு செய்யத் தாது உப்புக் கலவையை தீவனத்தில் 2% கலந்து கொடுக்க வேண்டும். தாது உப்புக் கலவையிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சிக்கும் அயோடின் உடல் வளர்ச்சிக்கும், குட்டி வளர்ச்சிக்கும், கோபால்ட் வைட்டமின் உற்பத்திக்கும் பயன்படுகின்றன.
வைட்டமின்கள் தேவை
அசைபோடும் விலங்கினங்களுக்கு மற்ற உயிரினங்களைப் போன்று எல்லாவித வைட்டமின்களும் உணவில் அளிக்கத் தேவை இல்லை. பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் வெள்ளாடுகளுக்கு வேண்டிய பி.காம்பிளக்ஸ் வைட்டமின்களைத் தயாரித்து விடுகின்றன. மேலும் பெரு வயிற்றுலுள்ள செல்கள் “சி” வைட்டமினை உற்பத்தி செய்து விடுகின்றன.
வெள்ளாடுகள் சூரிய ஒளி மூலம் தோலிலுள்ள கொழுப்புச் சார்ந்த பொருட்களைக் கொண்டு வைட்டமின் “டி” தயாரித்துக் கொள்கின்றன. அத்துடன் வெயிலில் காய்ந்த புல், தழைகள் மூலமும் இவ்வைட்டமினைப் பெற்றுக் கொள்ளுகின்றன.
வெள்ளாட்டுகளுக்கு மிகவும் தேவையான வைட்டமின், வைட்டமின் “ஏ” ஆகும். நன்கு பசுந்தழை, புல் உண்ணும் வெள்ளாடுகள் இச்சத்துகளினால் பாதிக்கப்படுவதில்லை.
சாதாரணமாக வெள்ளாடுகள் எவ்வளவு தீவனம் உண்ணும்? எவ்வகைத் தீவனத்தை எவ்வளவு, எவ்வாறு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கலாம். அதற்கு முன் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது ஓர் அறிவியல் மட்டுமல்ல. அது ஒரு கலை. ஆகவே இங்குத் தீவனம் அளிப்பது குறித்துத் தோராயமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆடு வளர்ப்போர் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆட்டின் தேவையை அறிந்து தீவனம் அளித்துப் பயன் பெற வேண்டும்.
வெள்ளாடுகளின் தீவனம் தேவை மிக அதிகமாகும். சாதாரணமாக மாட்டினம் தனது உடல் எடையில் 1.5 முதல் 2.0% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும். ஆனால் வெள்ளாடுகள் தனது உடல் எடையில் 2 முதல் 5% தீவனம் ஏற்கும். ஆகவே வெள்ளாடுகள் கடும்பசி கொண்ட விலங்கினமாகக் கொள்ளலாம். வெள்ளாடுகளுக்குச் செம்மறி ஆடுகளைவிட இரு மடங்கு கொண்ட பெரு வயிறு உள்ளது. இதன் காரணமாகவே, வெள்ளாடுகள் பசுந்தழை மற்றும் புல்லை மட்டும் உண்டு வளர்ச்சியடைந்து பாலும் கொடுக்க முடிகின்றது. மேலும், குளிர் நாட்டைச் சேர்ந்த வெள்ளாடுகள் அதிகத் தீவனம் ஏற்கும். வெப்ப நாடுகளில் உள்ள ஆடுகள் குறைவாகவே தீவனம் ஏற்கும். இதனட காரணமாகவே குளிர்ப் பகுதி ஆடுகளுக்கு அகன்ற உடம்பும், வெப்ப நாட்டு ஆடுகள் ஒடுங்கிய உடலமைப்பும் கொண்டுள்ளன.
அடுத்து வெள்ளாடுகளின் சுவை உணர்வு அலாதியானது. வெள்ளாடு தின்னாது ஒதுக்கும் பசுந்தீவனம் சில மட்டுமே. மேலும் ஆடுகளுக்கு ஒரே வகைத் தழையோ, புல்லோ தொடர்ந்து கொடுக்கக் கூடாது. சில வகையான தழைகளைக் கலந்து கொடுப்பதே சத்துக்குறைவைத் தீர்க்கச் சிறந்த வழியாகும். மேலும் புதுவகைத் தீவனங்கள் கொடுக்கும் போது, சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்திய பின் ஏற்ற அளவு கொடுக்க வேண்டும். பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள், பொதுப்படையாகவே சில இனங்களைச் சார்ந்ததாயினும், அவற்றின் எண்ணிக்கை மற்றும் வகைகள் மாறுபட்ட நிலையில் இருக்கும். அப்பகுதியின் தீவனமும் இம்மாறுபாட்டிற்குக் காரணமாகும்.
வெள்ளாடுகள் தீவனத்தை அதிக அளவில் விரயம் செய்யும் குணமுடையவை. தொட்டியில் மற்றும் கூடையில், தழையைப் போடும் வேளையில் அவற்றை இழுத்துத் தரையில் வீசி உண்ணத் தொடங்கும். ஆனால், தரையில் விழுந்து மிதிபட்ட தீவனத்தை உண்ணாது வீணாக்கும். ஆகவே, தீவனத் தொட்டி அடைப்பு வைப்பது அவசியம். சிறிய அளவில், வளர்க்கும் போது தழையைக் கொட்டகைக்காலில் கட்டி வைக்க வேண்டும். இதனால், தீவனம் வீணாவது தவிர்க்கப்படும்.
மேலும் வெள்ளாடுகளுக்கு மூன்று முதல் ஐந்து முறையாக தீவனத்தைப் பிரித்துப் பல்வேறு வேளையில், கொடுத்தால் அதிகம் வீணாக்காமல் தின்னும். அடுத்த ஒருமுறையாவது, காய்ந்த தழை அல்லது புல் கொடுக்க வேண்டும் இவ்வாறாக வெள்ளாடுகளுக்குத் தீவனம் மூன்று வகையில் வழங்க வேண்டும். (1) பசுந்தழை மற்றும் புல் (2) காய்ந்த தழை மற்றும் புல் (3) கலப்புத் தீவனம் ஆகிய மூன்று வகையாக வழங்கலாம். பசுந்தழை மற்றும் புல் குறித்துத் தனியாக விவாதிக்கலாம்.
உலர்ந்த தீவனம்
நரிப்பயறு, சணப்பு, புல், குதிரை மசால், வேலி மசால் போன்றவற்றைக் காய வைத்துத் தீவனமாக அளிக்கலாம். ஆனால், பசுந்தீவனப்பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இதை எல்லாராலும் நடைமுறைப்படுத்த முடியாது. நிறையப் பசுந்தீவனம் உற்பத்தி செய்பவர்கள் இதனைச் செய்யலாம். பொதுவாகப் பிற விவசாய உப பொருட்கள், உதிரும் இலை, சருகுகளைத் தீவனமாக அளிப்பதே சிறந்தது.
உளுந்துச் செடி மற்றும் தட்டைப்பயிற்றுச் செடி
நெல் அறுவடைக்குப்பின், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலும், உளுந்து விதைக்கப்படுகின்றது. பல இடங்களில் , உளுந்து நெற்றுகள் பிரிக்கப்பட்டு, அதன் செடிகள், நன்கு காயவைத்து வைக்கோல் போரின் இடையே சேமித்து வைக்கப்படுகின்றன. இது சிறந்த முறை,  முக்கியக் குறிப்பு நன்கு உலர வைக்காத செடிகளில் பூஞ்சைக் காளான் தாக்குதல் ஏற்பட்டுத் தீவனத்திற்குப் பயன்படாமல் போய்விடும்.
மழைக்காலங்களில், புன்செய் மற்றும் மேட்டு நிலங்களில் தட்டைப் பயறு பயிரிடப்படுகின்றது. இதன் கொடியையும், பயற்றின் நெற்றைப் பிரித்தபின் காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். அத்துடன் உறுந்து, பயறு நெற்றுகளின் தோலையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
இலைச் சருகுகள்
மா, பலா, மரங்களில் உதிர்ந்த சருகுகளை வெள்ளாடுகள் பல விரும்பி உண்ணும். ஆகவே இம்மரங்களின் உதிர்ந்த இலைகளை எரித்து வீணாக்கலாம், சாமானிய ஆடு வளர்ப்போருக்குக் கிடைக்குமாறு செய்வது நல்லது.
பனங்காய்
பனங்காய் சிறிதாகச் சீவப்பட்ட நுங்கும் வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகின்றன.
பலாத்தோல் மற்றும் கொட்டை
பலாப்பழத் தோல் சிறிதாக நறுக்கப்பட்டு, வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். பொதுவாக வாழைப்பழம் விற்கும் பெட்டிக் கடைக்காரர்கள் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுவாகவே பழக் கடையில் பழத் தோலைப் போடக் கூடை ஒன்று வைத்திருப்பார்கள். வெள்ளாடுகள் வாழைப்பழத்தோலை விரும்பி உண்ணும்.
பண அடிப்படையில் தீவனத்தின் மதிப்பு
ஒவ்வொரு தானியமும் வெள்ளாட்டுத் தீவனமும் அவற்றின் விளைச்சல் அளவு, வெளியிடங்களிலிருந்து சந்தைக்கு வந்தது போன்ற காரணங்களினால், அவற்றின் விலையில் மாறுபடும். ஆனால், பண்ணையாளர்கள் தீவனங்களில் அடங்கிய புரதம் மற்றும் இதர சத்துகக்கள் அடிப்படையில் தீவனங்களுக்கு மதிப்பு அளித்துத் தீவனங்களை வாங்க வேண்டும். சந்தையில் அதிக வரத்துக் காரணமாக ஒரு சத்தான தீவனம் மலிவான விலையில் கிடைக்கலாம். அதே போல் சந்தை வரத்துக் குறைவு காரணமாகச் சத்து குறைந்த வேறொரு தீவனம் அதிக விலைக்கு விற்கப்படலாம். ஆகவே, சத்து அடிப்படையில் தீவனங்களை வாங்குவதே ஆதாயமான செய்கையாகும். வெள்ளாடுகளின் சுவை உணர்ச்சி மனிதர்களைப் போல் சிறப்பாக இல்லை. அவை இனிப்பு, புளிப்பு, உப்பு, சுவைகளை விரும்பும். கசப்புத் தன்மையை வெள்ளாடுகள் மற்ற கால்நடைகளை விட நன்கு ஏற்கும். மேலும் நம்மைப் போல் ஆடுகள் பல்வேறு சுவையை எண்ணி ஒருவிதமான தீவனத்தை மறுப்பதில்லை. இவற்றை அறிந்து ஏற்றிபடி வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டும்.
துவரை மற்றும் உளுந்துப் பொட்டு
துவரம் பருப்பு, மற்றும் உளுந்தும் பருப்பு தயாரிக்கும் ஆலைகளிலிருந்து பொட்டு உப பொருளாகக் கிடைக்கின்றது. இதில் உமியுடன், குருத்து, நொறுங்கிய பருப்புகள் இருக்கும். இதன் சிறந்த வாசனை வெள்ளாடுகளைக் கலப்புத் தீவனத்தைத் தின்னத் தூண்டும்

ஆண்டுக்கு 20 லட்சம்... அள்ளிக்கொடுக்கும் ஆடுகள்

விவசாயத்தின் துணைத்தொழிலாக இருந்து வந்த கால்நடை வளர்ப்பு, தற்போது முக்கியத் தொழிலாக உருவெடுத்து வருகிறது. அதிலும் 'ஏழைகளின் பசுக்கள்’ என்று அழைக்கப்படும் 'ஆடு’களை வளர்க்கும் தொழில்... அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. முறையான தொழில்நுட்பங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கின்றன, ஆடுகள். அந்த வகையில், இத்தொழிலில் நல்ல வருவாயை ஈட்டி வருகிறார், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகேயுள்ள நாச்சிவலசு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி. பகல் பொழுதொன்றில் அவருடைய பண்ணைக்குள் நுழைந்தோம். மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேசத் தொடங்கிய குமாரசாமி, ''நமக்கு விவசாயந்தானுங்க குலத்தொழில். 10 ஏக்கர் நிலத்தை வெச்சு பண்ணையம் பண்ணிக்கிட்டு இருக்கேன். 3 ஏக்கர்ல மரவள்ளி;3 ஏக்கர்ல மஞ்சள்; 3 ஏக்கர்ல வேலிமசால், கோ-4, கோ.எஃப்.எஸ்-29 தீவனப் பயிர்கள்னு எல்லாம் இருக்கு. மீதி ஒரு ஏக்கர்ல ஆடு ஷெட், வீடு இது ரெண்டும் இருக்கு.
சின்னவயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல நல்ல ஈடுபாடு. வெவசாயத்தை கையில எடுத்த பிறகு, காங்கேயம் மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன். 98-ம் வருஷம் காட்டுப்பாக்கத்துல ஆடு வளர்ப்புப் பயிற்சி கொடுத்தாங்க. அதுல பயிற்சி எடுத்ததுக்குப் பெறகு பண்ணை வெக்கலாம்னு தைரியம் வந்துச்சு. ஆனா, எல்லாருந்தான் பண்ணை வெக்குறாங்க... நாம வித்தியாசமா பண்ணனும்னு நெனைச்சேன். அப்பத்தான் ஜமுனாபாரி ஆடுகளை மட்டும் வளர்க்கலாம்னு தோணுச்சு. 10 ஆடுகள வாங்கிட்டு பண்ணையை ஆரம்பிச்சு... இப்போ 10 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சுங்க. மொத்தம் 90 பெட்டை, 4 கிடா இப்ப இருக்கு.
கொட்டிலில் பணத்தைக் கொட்ட வேண்டாம்!
பல பேரு ஆட்டுப் பண்ணை வெக்குறேனுட்டு கொட்டில் அமைக்க லட்ச லட்சமா செலவு செய்றாங்க. முழுக்க இரும்புச் சட்டத்துல அமைச்சாதான் ரொம்பநாள் தாங்கும்னு சொல்லி அதுலதான் அமைப்பாங்க. ஆனா, அம்புட்டு செலவு செஞ்சு கொட்டில் அமைக்கத் தேவைஇல்லீங்க. நான் பனை மர சட்டம், அமைச்சேன். கீழ தூணுக்குப் பதிலா தைல மரக்கட்டைகளை வெச்சிருக்கேன். (எக்காரணத்தைக் கொண்டும், தென்னை ரீப்பரை பயன்படுத்த கூடாது. ஆடுகள் தென்னை ரீப்பரை கடித்து, துப்பிவிடும்.) பத்து வருஷம் ஆகியும் இது இன்னமும் நல்லாத்தான் இருக்கு. ராத்திரி ஆடுகள அடைக்கறதுக்கு மட்டும்தான் கொட்டிலைப் பயன்படுத்துறேன். அதனால, கொட்டிலுக்குள்ள தீவனம், தண்ணி வெக்கிறதுக்கெல்லாம் தனி அமைப்புகள் கிடையாது. அதனால செலவு குறைஞ்சுடுச்சு. இப்படி குறைக்கிற செலவுல இன்னும் நாலு ஆடுகளைச் சேர்த்து வாங்கி விடலாம்'' என்ற குமாரசாமி, தொடர்ந்து பண்ணையைப் பற்றிச் சொன்னார்.
காலாற நடக்க காலியிடம்!
'60 அடி நீளம், 20 அடி அகலத்துல தரையில இருந்து 3 அடி உயரம் விட்டு ஒரு கொட்டில் இருக்கு. இது ஆரம்பத்துல அமைச்சது. ஆஸ்பெஸ்டாஸ்ல கூரை போட்டு, கொட்டிலுக்கு உள்ளயே 10 அடி நீளம், 20 அடி அகல இடத்தை குட்டிகளுக்காக ஒதுக்கியிருந்தேன். கொட்டிலுக்கு வெளியே கால் ஏக்கர் அளவுக்கு காலி இடம் இருக்கு. அதுல கொஞ்சம் தென்னை மரங்க இருக்கறதால, வெயில் அதிகமா விழாது. அதை சுத்தி வேலி போட்டு, பகல் பொழுதுல ஆடுகளை அதுக்குள்ள மேய விடுவேன். சாயங்காலம் ஆடுக தானாவே கொட்டில்ல அடைஞ்சுக்கும். அதிக வெயில் அடிச்சாலோ, மழை வந்தாலோ... தானாவே கொட்டிலுக்குள்ள போயிடும்.
இந்த இடத்துல தண்ணிக்காக மூணு இரும்புத் தொட்டிகள் இருக்கு. அதுல தினமும் தண்ணியை நிரப்பிட்டா ஆடுக தேவைப்படும்போது  குடிச்சுக்கும். அதேமாதிரி, தீவனத்தை நான் நறுக்கிப் போடுறதில்லை. அங்கங்க குச்சிகளை நட்டு, அதுல சோளப்பயிர், வேலிமசால், தீவனப்பயிர் எல்லாத்தையும் கட்டி தொங்க விட்டுடுவேன். இப்படிச் செய்றதால, தீவனம் கொஞ்சம் வீணாகும். ஆனா, தலையை உயர்த்தி தீனி எடுக்கறதுதான் ஆடுகளோட வழக்கம்கறதால... அதோட இயல்புலயே விட்டுடறேன். கிடாய்களை மட்டும், நீளமான கயிறு போட்டு தென்னை மரத்துல கட்டி வெச்சுடுவேன். பருவத்துக்கு வர்ற பெட்டைக, தானா கிடா கிட்ட வந்து சேர்ந்துக்கும். எல்லாமே இயல்பா நடக்கறதால, பருவம் தப்பாம குட்டிக கிடைச்சுடுது.
இப்ப, புதுசா 30 அடி நீளம், 10 அடி அகலம், 4 அடி உயரத்துல ஒரு கொட்டில் அமைச்சுருக்கேன். அதுலதான் இப்போ குட்டி போட்ட ஆடுகளையும், குட்டிகளையும் விடுறேன். பெரும்பாலும் நானும், என் மனைவியுமே எல்லா வேலைகளையும் பாத்துடுவோம். இப்ப, கொஞ்ச நாளா தீவனம் அறுக்குறதுக்கு மட்டும் ஒரு ஆளை வேலைக்கு வெச்சுருக்கோம்'' என்ற குமாரசாமி பராமரிப்பு பற்றிய விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
'முறையா பராமரிச்சா ஆடுகளுக்குப் பெருசா நோய் தாக்காது. வெளி மாநிலங்கள்ல இருந்து வாங்கிட்டு வர்ற ஆடுகளுக்குக் கண்டிப்பா பி.பி.ஆர் (Peste des petits ruminants­-PPR) தடுப்பூசி போட்டு, தனியா ஒரு மாசத்துக்குப் பிரிச்சு வெச்சுடணும். அதுக்கப்பறம்தான் பட்டியில மத்த ஆடுகளோட சேர்க்கணும். இந்த ஒரு மாசத்துக்குள்ள அதுக்கு எந்த நோய் தாக்கியிருந்தாலும், தெரிஞ்சு போயிடும். ஆடுகளுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்யணும்.
சில நேரங்கள்ல தோல்ல ஏதாவது அடிபட்டு, புண்ணாகி அது முடிக்குள்ள மறைஞ்சுடும். வெளிய தெரியாமலே சீழ் பிடிச்சுடும். அதேமாதிரி அதிக முடி இருந்தா... பேன், உண்ணிகளும் தெரியாது. அதனால, வருஷத்துக்கு ஒரு தடவை உடம்புல இருக்குற முடிகளை ஒட்ட வெட்டி விட்டுடணும். இதனால ஆடுகளும் ஆரோக்கியமா வளரும். முடிவெட்டி விடுறதுக்கு தனியா ஆளுங்க இருக்காங்க.
ஒரு ஆட்டுக்கு 100 ரூபா வாங்கறாங்க. ஆடுகள் உலாத்துறதுக்கான இடம் மண்தரையா இருக்கணும். அப்பதான் கழிவுகள் மண்ல கலந்துக்கும். மண்ல தண்ணி, சிறுநீர் தேங்காமப் பாத்துக்கணும். தேங்கி நின்னா.. குளம்புல புண்ணு வந்துடும். குட்டிகளை மூணு மாசம் வரைக்கும் கொட்டில்ல இருந்து வெளிய விடக்கூடாது. கொட்டில்ல கொசுக்கள் இருக்கக் கூடாது'' என்ற குமாரசாமி, நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
'மத்த ஆடுகளைவிட, ஜமுனாபாரிக்கு எப்பவும் நல்ல கிராக்கி இருக்கு. பெரிய உருவம், காது, அதிக பால்னு பல விஷயங்களால இந்த ரகத்தை விரும்பி வளர்க்கறாங்க. பெரிய பண்ணையா இல்லாட்டியும் ஆசைக்காக, அழகுக்காக ஒண்ணு ரெண்டு வளர்க்கறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. மூணு மாச வயசுல, ஒரு குட்டி 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. நல்ல பிரவுன் கலர் குட்டியா இருந்தா அதிக விலை கிடைக்குது.
ஜமுனாபாரி ஆடு ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி போடும். ரெண்டு வருஷத்துக்கு மூணு ஈத்து. இதன் மூலமா ரெண்டு வருஷத்துல 6 குட்டிகள் கிடைக்கும். இந்தக் கணக்குப்படி, ஒரு ஆடு மூலமா வருஷத்துக்கு 3 குட்டிகள் கிடைக்கும்.
சராசரியா 70 ஆடுகள் மூலமா... வருஷத்துக்கு 210 குட்டிகள் கிடைக்கும். வருஷத்துக்கு 200 குட்டிகளுக்குக் குறையாம வித்துடுவேன். ஒரு குட்டி 10 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே... 20 லட்ச ரூபாய் வருமானம். அதுபோக, ஒவ்வொரு வருஷமும் 10 டன் புழுக்கை கிடைக்கும், அது டன் 4 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகுது. இந்தப் பணமே பண்ணை பராமரிப்புக்குப் போதுமானதா இருக்கும். குட்டிகள் மூலமா கிடைக்கிற பணம் முழுசும் லாபம்தான்.
ஜமுனாபாரி ஆடுக 10 ஈத்து வரைக்கும் குட்டி ஈனும். 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குற ஒரு குட்டியை வளர்த்தா... அது மூலமா, 20 குட்டிக கிடைக்கும். ஒரு குட்டி 10 ஆயிரம் ரூபாய்னு வித்தாலே, 2 லட்ச ரூபாய் கிடைச்சுடும். இந்த லாபம்தான் ஜமுனாபாரிக்கும் மத்த ரக ஆடுகளுக்கும் உள்ள வித்தியாசம்'' என்றார், சந்தோஷமாக.
தொடர்புக்கு,
குமாரசாமி, செல்போன்: 98652-46868
முரளி, தொலைபேசி: 04298-262023.

எலும்புதான் எடை !
ஜமுனாபாரி ஆடுகளைப் பற்றி பேசும் சேலம் மாவட்டம் பொட்டனேரியில் உள்ள மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் டாக்டர் முரளி, ''ஜமுனாபாரி ஆடுகளைப் பொறுத்தவரை குட்டிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பெரிய ஆடுகளை கறிக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடுகளில் எலும்பின் எடை, கறியின் எடையைவிட அதிகமாக இருக்கும். இந்த ரகத்தில் ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் பால் வரை கிடைக்கும் என்பார்கள். அது தவறு. மற்ற ரகங்களைவிட கொஞ்சம் அதிகமாகப் பால் கிடைக்கும், அவ்வளவுதான். சிலர் குட்டிகள் குடித்தது போக, மீதமுள்ள பாலைக் கறந்து விடுவார்கள். அப்படிச் செய்யக் கூடாது. முழுப்பாலையும் குட்டிகளுக்கே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் குட்டிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்'' என்கிறார்.

பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!

பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி! 

பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,
''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!